சென்னை மாநகராட்சி கைவிடப்பட்ட வாகனங்களை அகற்ற 24 மணி நேரக் கெடு!

 
auto auto

சென்னை மாநகரச் சாலைகளில் நீண்ட நாட்களாக யாருமின்றி நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாகத் தேங்கி நிற்கும் இந்த பழைய வாகனங்களால் பல்வேறு சுகாதாரம் மற்றும் பாதுகாப்புப் பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் சாலை ஓரங்களில் கேட்பாரற்று கிடக்கும் அனைத்து வாகனங்களையும் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இத்தகைய வாகனங்களை அதன் உரிமையாளர்கள் 24 மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கெடு விதித்துள்ளனர். தவறும்பட்சத்தில் அந்த வாகனங்கள் அனைத்தும் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் எக்காரணம் கொண்டும் மீண்டும் உரிமையாளர்களிடம் திருப்பித் தரப்பட மாட்டாது என்றும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

சாலைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருக்கும் இது போன்ற வாகனங்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கப் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி சார்பில் 1913 என்ற பிரத்யேக உதவி எண் அறிவிக்கப்பட்டுச் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த எண்ணிற்குப் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் அளித்தால் சம்பந்தப்பட்ட இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்று உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.