அரசு ஊழியர்களுக்கு செக்... ஒரே இடத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணியிட மாற்றம்!

 
முதல்வர் விஜய்

தமிழக அரசுத் துறைகளில் ஒரே இடத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் ஊழியர்களைக் கண்டறிந்து பணியிட மாற்றம் செய்வதற்கான புதிய உத்தரவை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பிறப்பித்துள்ளது.

அரசு விதிகளின்படி, ஊழியர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும்போது அவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவது வழக்கமான நடைமுறையாகும். இருப்பினும், சிலர் பதவி உயர்வு பெற்று வேறு ஊருக்குச் சென்று சில நாட்களிலேயே, நிர்வாகக் காரணங்களைக் கூறியோ அல்லது தற்காலிகப் பணி மாறுதலைப் பெற்றோ மீண்டும் தங்களின் பழைய இடத்திற்கே வந்துவிடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

முதல்வர் முதலமைச்சர் விஜய்

இந்த முறைகேடுகளைத் தடுத்து நிறுத்தத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் இயக்குநரகங்கள் மற்றும் தலைமை அலுவலகங்களுக்கு முக்கியச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிர்வாக அலுவலர், இளநிலை நிர்வாக அலுவலர், அலுவலகக் கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் ஆகிய பணியிடங்களில் உள்ள ஊழியர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து 5 முதல் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வருகிறார்களா என்பது குறித்த முழுமையான விவரங்களைச் சேகரித்து வரும் செப்டம்பர் 23-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள்

ஒரு அரசு ஊழியர் ஒரே இடத்தில் பல ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றுவதால் நிர்வாக ரீதியாகப் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாகவும், புதிய மாற்றங்கள் தடைபடுவதாகவும் அரசு கருதுகிறது. மேலும், பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் ஊழியர்களுக்கு ஏற்படும் அதிகப்படியான நெருக்கமானது முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்துவிடுவதால், இத்தகைய நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. அரசின் இந்த வெளிப்படையான நடவடிக்கைக்குப் பொதுமக்கள் மத்தியில் பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது.