சேரன் vs வி.சி.குகநாதன்.. தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தல் தொடங்கியது.. பாக்யராஜ் தேர்வு செய்த அணி போட்டி!

 
தென்னிந்திய தேர்தல்

கோலிவுட் திரையுலகில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் 2026-2029-ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல், இன்று (ஜூலை 19) காலை முதல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை வடபழனியில் உள்ள தென்னிந்திய திரைப்பட சங்க வளாகத்தில் நடைபெறும் இந்தத் தேர்தல் வாக்குப்பதிவு, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியும் அதிகாரியுமான உமா சங்கர் பாபு அவர்களின் நேரடி மேற்பார்வையில் முறைப்படி நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த முறை கே.பாக்யராஜ் தலைமையில் இந்தச் சங்கம் செயல்பட்டு வந்த நிலையில், இந்த முறை அவரது பெயரிலேயே இரண்டு வெவ்வேறு அணிகள் களமிறங்கிப் போட்டியிடுவது கோலிவுட் வட்டாரத்தில் சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது. நம்ம கே.பாக்யராஜ் அணி அணியின் சார்பாகப் பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

பாக்யராஜ்

திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் அணியின் சார்பாக மூத்த இயக்குநரும் தயாரிப்பாளருமான வி.சி. குகநாதன் தலைவர் பதவிக்கு நேரடியாகப் போட்டியிடுகிறார். இருதரப்பிலும் உள்ள மூத்த எழுத்தாளர்கள் மற்றும் இயக்குநர்கள் தங்களின் ஆதரவாளர்களைத் திரட்டி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டதால், தேர்தல் களம் காலை முதலே பரபரப்பாகக் காணப்படுகிறது.

தலைவர், துணைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட சங்கத்தின் மிக முக்கியமான 21 பதவிகளுக்காக இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

திரையுலகில் அங்கீகரிக்கப்பட்ட கதை மற்றும் திரைக்கதை எழுத்தாளர்கள் அடங்கிய இந்தச் சங்கத்தில், ஒட்டுமொத்தமாகத் தகுதியுடைய 483 உறுப்பினர்கள் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்ய வாக்குச் சாவடிக்கு வருகை தந்துள்ளனர். இன்று மாலை வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன், வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கப்பட்டு, இன்றே முடிவுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தேர்தல் நடத்தும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.