சதுரங்க வேட்டை... கேட்டரிங் தொழில் ஆசைக்காட்டி ரூ.1.18 கோடி மோசடி - அம்பத்தூரைச் சேர்ந்த நபர் கைது!
சென்னை போரூரைச் சேர்ந்தவர்களிடம் கேட்டரிங் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தைக் கூறி, ரூ.1 கோடியே 18 லட்சம் மோசடி செய்த புகாரில் அம்பத்தூரைச் சேர்ந்த நபர் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போரூரைச் சேர்ந்த வேலவன் (35) மற்றும் அவரது நண்பர்களிடம், தான் பல முன்னணி நிறுவனங்களுக்கு உணவு விநியோகம் செய்து வருவதாகவும், கேட்டரிங் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டித் தருவதாகவும் அம்பத்தூரைச் சேர்ந்த உப்பிலி சீனிவாசன் (34) கூறியுள்ளார். இதை நம்பி அவர்கள் அளித்த பெரும் தொகையைப் பெற்றுக்கொண்ட அவர், உறுதியளித்தபடி லாபத்தையோ அல்லது முதலீட்டுத் தொகையையோ திருப்பித் தராமல் ஏமாற்றியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த உப்பிலி சீனிவாசனைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
