குழந்தைகள், பெண்களுக்கு சத்து தரும் செட்டிநாடு பாரம்பரிய இனிப்பு உக்காரை செய்முறை!
பாசிப்பருப்பு, ரவை மற்றும் வெல்லம் சேர்த்துச் செய்யப்படும் செட்டிநாடு ஸ்பெஷல் 'உக்காரை' இனிப்பு செய்முறை எப்படி என்று பார்க்கலாம். பள்ளிக் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் தருவதற்கு ஏற்ற பலகாரம். ருசியுடன் கூடவே குழந்தைகளுக்கு சத்தும் தரும் என்பதால் ஆரோக்கியமான உணவாகவும் செட்டிநாடு பகுதிகளில் இன்றும் கொண்டாடப்படுகிறது.
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - ½ கப், வெல்லம் - 1½ கப், ரவை - ¼ கப், துருவிய தேங்காய் - ¼ கப், நெய் - 4 டேபிள் ஸ்பூன், கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், முந்திரி பருப்பு - 10, ஏலக்காய் பொடி - சிறிதளவு

செய்முறை:
பாத்திரத்தில் பாசிப்பருப்பை லேசாக வறுத்து, நீரால் கழுவி 1½ கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும் (குக்கரில் 1 விசில் விடலாம்). மற்றொரு பாத்திரத்தில் 1½ கப் வெல்லத்துடன் ½ கப் தண்ணீர் சேர்த்து, வெல்லம் கரையும் வரை கொதிக்க வைத்து வடிகட்டித் தனியாக வைக்கவும் (கம்பி பதம் தேவையில்லை).
பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரியைப் பொன்னிறமாக வறுத்து தனியாக எடுக்கவும். அதே நெய்யுடன் 2 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் சேர்த்து சூடானதும், ரவையைச் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். ரவை பொரிந்ததும் துருவிய தேங்காய், வெந்த பாசிப்பருப்பு மற்றும் தயாரித்து வைத்துள்ள வெல்லப்பாகு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்துக் கிளறவும்.
கலவை கெட்டியாக வரும் போது மீதமுள்ள 2 டேபிள் ஸ்பூன் நெய், ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த முந்திரி சேர்த்து நன்றாகத் திரண்டு வரும் வரை கிளறி இறக்கினால் சுவையான உக்காரை தயார்.
