பரிதாபம்... சிக்கன் பிரியாணி சாப்பிட்ட பின் தர்பூசணி... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து பலி!

 
chicken chicken

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட பிறகு தர்பூசணி பழம் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பைதோனி பகுதியைச் சேர்ந்த அப்துல்லா என்பவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் கடந்த சனிக்கிழமை இரவு வீட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு நள்ளிரவு  ஒரு மணி அளவில் அவர்கள் அனைவரும் தர்பூசணி பழம் சாப்பிட்டுள்ளனர். மறுநாள் அதிகாலை 5.30 மணி அளவில் அவர்களுக்குத் திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அப்துல்லாவின் இளைய மகள் ஷைனப் முதலில் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களிலேயே அப்துல்லாவின் மனைவி நஸ்ரீன் மற்றும் மூத்த மகள் ஆயிஷாவும் பரிதாபமாக உயிரிழந்தனர். அன்றே இரவில் அப்துல்லாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரே குடும்பத்தில் நான்கு பேர் சில மணி நேர இடைவெளியில் மரணமடைந்தது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களுடன் பிரியாணி சாப்பிட்ட உறவினர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில், தர்பூசணி சாப்பிட்ட அப்துல்லா குடும்பத்தினர் மட்டும் உயிரிழந்துள்ளனர். இதனால் தர்பூசணி பழம் விஷத்தன்மையாக மாறியிருக்கலாம் அல்லது உணவு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த பயத்தையும் சோகத்தையும் உண்டாக்கியுள்ளது.