சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

 
சிதம்பரம் நடராஜர் கோயில் கொடியேற்றம் சிதம்பரம் நடராஜர் கோயில் கொடியேற்றம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு நடராஜர் கோயிலின் மிக முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான 'ஆனித்திருமஞ்சனத் பெருவிழா', இன்று காலை  பக்தர்களின் முன்னிலையில் கொடியேற்றத்துடன் சிறப்பாகத் தொடங்கியது.

இன்று ஆனித்திருமஞ்சனத் திருவிழா தொடங்குவதை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கே சிதம்பரம் நடராஜர் கோயிலின் நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்குத் தற்போதைய ஆன்மீக முறைப்படி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, சித்சபையில் இருந்து ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரங்களுடன் முறைப்படி எழுந்தருளி, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்குக் காட்சியளித்து அருள் பாலித்தனர்.

நடராஜர்

விழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம் இன்று காலை 8 மணியளவில் வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது. நடராஜர் கோயிலின் உற்சவ ஆச்சாரியார் சி.ந.ராஜூ தீட்சிதர், முறைப்படியான பூசைகள் மற்றும் தீபாராதனைகளுடன் ரிஷபக் கொடியைக் கொடிமரத்தில் ஏற்றி வைத்து ஆனித்திருமஞ்சனப் பெருவிழாவைத் தொடங்கி வைத்தார்.

இந்தத் தெய்வீகக் கொடியேற்ற நிகழ்வைக் காண்பதற்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் திரண்டு, "நமசிவாய" கோஷங்களை எழுப்பி பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

இன்றில் இருந்து தொடங்கி பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும் இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம் ஜூன் 21-ஆம் தேதியும், உலகப் புகழ்பெற்ற 'ஆனித்திருமஞ்சன மகா தரிசன விழா' ஜூன் 22-ஆம் தேதியும் நடைபெற உள்ளன. விழா நாட்களை முன்னிட்டுப் பக்தர்களுக்கான அத்தியாவசிய வசதிகள் மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கடலூர் மாவட்ட நிர்வாகமும், கோயில் தீட்சிதர்களும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.