இன்று முதல்வர் ஸ்டாலின் நெல்லையில் பிரசாரம்... 5 வேட்பாளர்களை ஆதரித்துப் பொதுக்கூட்டம்!

 
ஸ்டாலின் பிரசாரம் ஸ்டாலின் பிரசாரம்

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாநிலம் தழுவிய தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நெல்லையில் நடைபெறும் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

சென்னையில் இருந்து இன்று மாலை 4.50 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி சென்றடையும் முதல்வர், அங்கிருந்து சாலை மார்க்கமாக நெல்லைக்கு வருகிறார். நெல்லை தெற்குப் புறவழிச்சாலையில் மாலை 6 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார். நெல்லையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அப்பாவு (சபாநாயகர்) - ராதாபுரம் தொகுதி, அப்துல் வகாப் (எம்.எல்.ஏ) - பாளையங்கோட்டை தொகுதி, சுப்பிரமணியன் - நெல்லை தொகுதி, நாங்குநேரி மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆகியோரை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்கிறார்.

ஸ்டாலின்

நெல்லைப் பிரசாரத்தை முடித்துக் கொண்டு இரவு கன்னியாகுமரி செல்லும் முதல்வர், அங்குத் தங்கி ஓய்வெடுக்கிறார். நாளை சனிக்கிழமை காலை (9 மணி) கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார்.

சனிக்கிழமை மாலை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அங்கு திமுக வேட்பாளர்கள் மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்), ராஜா (வாசுதேவநல்லூர்), கலை கதிரவன் (தென்காசி) மற்றும் கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க வேட்பாளர் ராஜேந்திரன் (கடையநல்லூர்), சங்கரன்கோவில் காங்கிரஸ் வேட்பாளர் ஆகியோரை ஆதரித்துப் பேசுகிறார்.

ஸ்டாலின் திமுக

முதல்வர் வருகையையொட்டி நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லை மாநகர் பகுதியில் இன்று ட்ரோன்கள் பறக்கக் காவல்துறை ஆணையர் தடை விதித்துள்ளார்.