நாளை கன்னியாகுமரி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்... நான்குவழி சாலையில் ரோடு ஷோ... ட்ரோன்கள் பறக்க தடை!

 
ட்ரோன்

பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காகப் பாதுகாப்புப் பணியில் 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை 10 மணிக்குச் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் பகல் 11 மணிக்குக் கன்னியாகுமரி வந்தடைகிறார். கன்னியாகுமரி நான்கு வழிச் சாலை முடியும் இடத்திலிருந்து பழைய பஸ் நிலையம் வரை ரோடு ஷோ மூலம் பொதுமக்களைச் சந்திக்கிறார். ரூ.1.46 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா அலங்கார வளைவைத் திறந்து வைக்கிறார்.

ஸ்டாலின் ட்ரோன்

புத்தளம் அருகே கல்லடிவிளையில் அமைக்கப்பட்டுள்ள 'மு.க.ஸ்டாலின் படைப்பகம்' மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவச் சிலையைத் திறந்து வைக்கிறார். மாலை 6.30 மணிக்கு நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் ரூ. 50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பொன்னப்ப நாடார் மணிமண்டபத்தைத் திறந்து வைக்கிறார்.

பிப்ரவரி 25 (நாளை மறுநாள்)  காலை 9.30 மணிக்கு நாகர்கோவில் கான்கார்டியா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் பங்கேற்கிறார். சுமார் 25,000-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

ஸ்டாலின்

முதலமைச்சரின் வருகையையொட்டிப் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் நகருக்குள் போக்குவரத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.