விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் - முதல்வர் விஜய் அறிவிப்பு!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட கோர வெடி விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் அனுப்பன்குளம் கிராமம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் விழுப்பனூர் கிராமம் ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த வெடிபொருள்கள் தொழிற்சாலைகளில் இந்த விபத்து எதிர்பாராதவிதமாக நேரிட்டுள்ளது.

இந்த விபத்துகளில் வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (56) மற்றும் சிவகாசி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (55) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்துகளில் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காளிராஜ் என்பவருக்குச் சிறப்பு சிகிச்சையும், லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் கருப்பாயி, மகாலட்சுமி, பவானி மற்றும் இருளாயி உள்ளிட்டோருக்கும் உரிய சிகிச்சையளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா நான்கு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயங்களுடன் சிகிச்சை பெறுவோருக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் நிதி உதவி வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
