திமுக ஆட்சியில் போராடிய விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான அனைத்து வழக்குகளும் ரத்து - முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!
தமிழகச் சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் விஜய், கடந்த ஆட்சிக் காலத்தில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்குகள் அனைத்தும் மனிதாபிமான அடிப்படையில் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

அமைதியான முறையில் போராடிய விவசாயிகள், ஆசிரியர்கள் மற்றும் பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீது கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் (2021-2026) பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் முழுமையாக வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் அறிவித்தார்.
மீஞ்சூரில் ரூ. 4,800 கோடி செலவில் 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஆவடி மாநகராட்சியில் ரூ. 500 கோடியில் 24 மணி நேரக் குடிநீர் திட்டம் மற்றும் கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத் திறனை அதிகரிக்க ரூ. 410 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு புதிய குடிநீர் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மதுரை, கடலூர் மற்றும் பல்வேறு நகர்ப்புறப் பகுதிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்த ரூ.1,000 கோடியும், பழமையான 33 கூட்டுக் குடிநீர் திட்டங்களைச் சீரமைக்க முதற்கட்டமாக ரூ.300 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
