கர்ப்பிணிப் பெண்ணுக்கு மேடையிலிருந்து கீழறங்கி வந்து பணி ஆணை வழங்கிய முதலமைச்சர் விஜய்!

 
பணி ஆணை

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மின்சாரத்துறை விழாவில், முதலமைச்சர் விஜய் நெறிமுறைகளைத் தாண்டி, மேடையை விட்டுத் திடீரெனக் கீழே இறங்கி வந்து கர்ப்பிணிப் பெண் ஒருவருக்குப் பணி நியமன ஆணை வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது. இன்று நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்வில், மின்சாரத்துறையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 383 உதவிப் பொறியாளர்களுக்கு முதலமைச்சர் பணி ஆணைகளை வழங்கினார்.

விழாவில் தேர்வாகியிருந்த இளநிலைப் பொறியாளர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டு முதலமைச்சரின் கைகளால் பணி நியமன ஆணைகளைப் பெற்றுக் கொண்டனர். அப்போது, உதவிப் பொறியாளராகத் தேர்வாகியிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் பணி ஆணை பெறுவதற்காக மேடைக்கு அருகே வந்து கொண்டிருந்தார். அவர் படிக்கட்டுகளில் ஏறி மேடைக்கு வருவதில் உள்ள சிரமத்தை மேடையிலிருந்தபடியே கவனித்த முதலமைச்சர் விஜய், உடனடியாகத் தனது பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளைத் தடுத்து நிறுத்திவிட்டு, அவரே மேடையை விட்டுக் கீழே இறங்கிச் சென்றார்.

 பணி நியமன ஆணை

படிக்கட்டுகளுக்குக் கீழே நின்று கொண்டிருந்த அந்த கர்ப்பிணிப் பெண்ணின் அருகே நேரில் சென்ற முதலமைச்சர், அவரிடம் பணி நியமன ஆணையை வழங்கி, அவரது உடல்நலம் குறித்தும் விசாரித்துத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த எதிர்பாராத அரசியல் நாகரிகம் மற்றும் மனிதநேயமிக்க செயலால் அந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

இதனை அங்கிருந்தவர்கள் தங்களது கைபேசிகளில் காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வர, "முதலமைச்சர் விஜய்" என்ற ஹேஷ்டேக்குடன் இந்த நெகிழ்ச்சியான வீடியோக்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகின்றன. பொதுமக்களும் அரசியல் பிரமுகர்களும் முதலமைச்சரின் இந்த எளிய அணுகுமுறையைப் பாராட்டி வருகின்றனர்.