"முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் யோகம்.. தவிர்க்க முடியாத சக்தியா இருப்பாரு"- ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் அவர்களின் ஜாதகம் குறித்து அவரது நெருங்கிய நண்பரும், ஜோதிடருமான ராதன் பண்டிட் அளித்துள்ள பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை அல்ல, அது ஒரு கணிதம் என்று வாதிடும் அவர், விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பல வியக்கத்தக்க தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
முதல்வர் விஜய்யின் ஜாதகத்தை பிரதமர் நரேந்திர மோடியின் ஜாதகத்துடன் ஒப்பிட்டுப் பேசிய ராதன் பண்டிட், "பிரதமர் மோடியின் ஜாதகம் எப்படியோ, அதே போன்ற ஒரு 'ஜெராக்ஸ் காப்பி' ஜாதகம்தான் முதல்வர் விஜய்க்கும் உள்ளது. அவருக்குப் பிரதமர் ஆகும் யோகம் பிரகாசமாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 2029-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடிக்கு ராகு தசை, ராகு புத்தி நடப்பதால் அவர் மீண்டும் பிரதமராவது கடினம் என்றும், அந்தச் சமயத்தில் ஒரு வலுவான 'மூன்றாம் அணி' உருவாகும் என்றும் அவர் கணித்துள்ளார். அப்போது விஜய் தனது யோகத்தின் உச்சத்தில் இருப்பார் என்பது ராதன் பண்டிட்டின் கணிப்பு.
நடிகர் அஜித் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "அஜித் சாருக்கும் முதல்வர் ஆகும் யோகம் ஜாதகத்தில் இருக்கிறது. ஆனால், விஜய்யின் ஜாதக பலப்படி அஜித் அவருக்குப் போட்டியாக அரசியலுக்கு வரமாட்டார்" என்று கூறியுள்ளார். 100 ஆண்டுகளைக் கடந்து வாழும் யோகம் விஜய்க்கு இருப்பதாகவும், அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளுக்கு அவருக்குப் போட்டியே இருக்காது என்றும் அவர் அதிரடியாகக் கூறியுள்ளார்.
"முதல்வர் விஜய்க்கு ஜோதிடத்தின் மீது துளியும் நம்பிக்கை கிடையாது" என்று ராதன் பண்டிட் ஒரு சுவாரசியமான தகவலைப் பகிர்ந்துள்ளார். "விஜய் சார் ஒரு ஜோதிடர் என்பதால் என்னை அங்கீகரிக்கவில்லை. தந்தை-மகன் போல, நண்பர்கள் போல எங்களுக்குள் ஒரு பிணைப்பு இருக்கிறது. நான் சொல்வது அவருக்குப் பிடித்ததால் அவர் கேட்டார்; ஆனால் அவர் அதை நம்பிக் கேட்டிருப்பார் என்று நான் நினைக்கவில்லை" என்று அவர் விளக்கியுள்ளார்.

தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசிய அவர், "நான் எந்த மதத்தையும் கடவுளையும் சாராதவன். வன்னிஅரசுவை விடப் பெரிய நாத்திகன். 3 மாதங்கள் சுடுகாட்டில் தூங்கும் அளவுக்குக் கஷ்டப்பட்டிருக்கிறேன். ஐடி (IT) ரெய்டு தவிர என் மீது வேறு எந்தக் குற்றச்சாட்டும் கிடையாது. 25 ஆயிரம் பெண்களைச் சந்திந்திருப்பேன், அனைவரையும் சகோதரியாகவே பார்த்துள்ளேன்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்த ஒரே தவறு, தன்னைச் சுற்றி இருந்தவர்கள் தவறு செய்தபோது அவர்களைக் கண்டிக்காமல் விட்டதுதான் என்று குறிப்பிட்ட அவர், அந்தத் தவறை விஜய் செய்யமாட்டார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இந்த ஜோதிடக் கணிப்புகள் சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்களிடையே வைரலாகி வருகிறது.
