“ஆட்சியை காப்பாற்ற தமிழக உரிமையை அடகு வைத்துள்ளார் முதல்வர் விஜய்” - உதயநிதி தாக்கு!
மேகதாதுவில் அணை கட்டத் தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழக முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அணை கட்டுவதற்குத் தமிழகத்தின் தனிப்பட்ட அனுமதி தேவையில்லை என மத்திய நீர் சக்தித் துறை இணையமைச்சர் நாடாளுமன்றத்தில் பதிலளித்திருந்தார். இது குறித்துத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் இந்தப் பதில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உரிமையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

முதல்வர் விஜய்யின் அணுகுமுறையைக் கடுமையாகச் சாடியுள்ள உதயநிதி ஸ்டாலின், டெல்லி எஜமானர்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவும், ஆட்சிக் கட்டிலைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸுக்கு எதிராகப் பேசாமல் தமிழக உரிமைகளைச் 'சோபா மாடல்' முதல்வர் விஜய் அடகு வைத்துவிட்டார். மேகதாது அணைக்கு எதிராகத் தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு சென்று மத்திய அரசிடம் குரல் கொடுக்க வேண்டும் எனச் சட்டமன்றத்திலேயே தாம் வலியுறுத்தியதாக நினைவூட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் தனது திரைப்படங்களின் வசூல் பாதிக்கப்படும் என்ற பயத்தினாலேயே, எதிர்க்கட்சிகளின் ஆலோசனையையோ அல்லது விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளையோ முதல்வர் விஜய் காதில் வாங்கிக் கொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

இனியும் இப் பிரச்சினையில் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோய்விடும் என்று எச்சரித்துள்ள உதயநிதி, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை உடனடியாக முறியடிக்கத் தேவையான சட்டப்பூர்வ மற்றும் அரசியல் நடவடிக்கைகளை முதல்வர் விஜய் விரைந்து எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
