துறை வாரியாக பட்ஜெட் ஆலோசனையைத் தொடங்கினார் முதலமைச்சர் விஜய்!

 
தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட உள்ள தங்களது முதல் முழுமையான நிதிநிலை அறிக்கைக்கான துறை வாரியான உயர்நிலை ஆலோசனைக் கூட்டங்களை, முதலமைச்சர் விஜய் இன்று  தொடங்கி வைத்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கியுள்ள இந்த விரிவான பட்ஜெட் ஆயத்தக் கூட்டங்கள், வரும் ஜூலை 22-ஆம் தேதி வரை சுமார் 20 நாட்களுக்குத் தொடர்ச்சியாக நடைபெற உள்ளன. இந்த உயர்நிலைக் கூட்டங்களில் ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சர்கள், துறை வாரியான அரசு முதன்மைச் செயலாளர்கள் மற்றும் நிதித்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் தனித்தனியாகப் பங்கேற்கின்றனர்.

கடந்த காலகட்டங்களில் ஒதுக்கப்பட்ட நிதியின் பயன்பாடு, தற்போதைய நிதித் தேவைகள் மற்றும் மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார நிலை குறித்து முதலமைச்சர் விஜய் இக்கூட்டங்களில் விரிவாகக் கேட்டறிய உள்ளார். முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் தயாரிக்கப்படும் இந்த முதல் பட்ஜெட், தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் கொள்கைப் பிரகடனங்களை உள்ளடக்கியதாக இருக்கும் எனத் தெரிகிறது.

இந்த ஆலோசனையின் முதல்கட்டமாக, தவெகவின் தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் பெற்றிருந்த 'வெற்றி தமிழகம்'  என்ற தொலைநோக்குத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள மக்கள் நலக் கூறுகளைச் செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

முதன்மை அமர்வாக இன்று, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் விரிவான ஆலோசனை நடத்தினார். இதில் குடும்ப அட்டைதாரர்களுக்கான புதிய சலுகைகள், ரேஷன் விநியோகக் கட்டமைப்பு மற்றும் பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற இருப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக மாலை அமர்வில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை மற்றும் வருவாய் பற்றாக்குறை குறித்து அண்மையில் தவெக அரசு நிதிநிலை வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. எனவே, நிதி ஆதாரங்களைப் பெருக்கித் தங்களது புதிய திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து இந்த 20 நாள் கூட்டத்தில் இறுதி வடிவம் கொடுக்கப்பட உள்ளது.

இந்த ஆலோசனைகள் அனைத்தும் ஜூலை 22-க்குள் நிறைவடைந்தவுடன் பட்ஜெட் அறிக்கை இறுதி செய்யப்படும். அதனைத் தொடர்ந்து, ஜூலை இறுதி வாரத்திலோ அல்லது ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்திலோ தமிழகச் சட்டமன்றப் பேரவை கூட்டப்பட்டு, தவெக அரசின் 2026-27 நிதியாண்டிற்கான புதிய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.