கோவையில் ரூ.300 கோடியில் கட்டப்பட்டுள்ள 'பெரியார் அறிவுலகத்தை' திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!
கோயம்புத்தூர் காந்திபுரத்தில் 7 மாடிகளுடன் சுமார் ரூ.300 கோடி செலவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள 'பெரியார் அறிவுலகத்தை' தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று நேரில் திறந்து வைத்துள்ளார்.
பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைப்பதற்காகச் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்க்கு, அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவை விமான நிலையத்திலிருந்து அவினாசி சாலை வழியாகக் காந்திபுரம் விழா நடைபெறும் பகுதி வரை முதலமைச்சர் திறந்த வேனில் ரோடு ஷோ சென்றார். வழியெங்கும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு அவர் கையசைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான 7 மாடி 'பெரியார் அறிவுலகம்' வளாகத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய், அதன் முகப்புப் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலையையும், திறப்பு விழா கல்வெட்டையும் ரிப்பன் வெட்டி முறைப்படி திறந்து வைத்தார்.
