"முதலமைச்சர் விஜய் தான் களவாணி.. அமர்ந்திருக்கும் நாற்காலியில் ஒரு கால் இரவல் கால்" - எடப்பாடி பழனிசாமி ஆவேசப் பதிலடி!

 
எடப்பாடி

அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளையும் "கூட்டுக் களவாணிகள்" என்று முதலமைச்சர் விஜய் அண்மையில் கரூரில் விமர்சித்திருந்த நிலையில், அதற்குச் சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுத்துள்ளார்.

முதலமைச்சர் விஜய்யின் விமர்சனத்திற்கு ஆவேசமாகப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரம் மூலம் ராஜினாமா செய்ய வைத்துத் தனது கட்சிக்கு இழுக்கும் முதலமைச்சர் விஜய்தான் உண்மையான களவாணி" என்று சாடினார். மேலும், "ஒரு நாற்காலி நிலையாக நிற்க நான்கு கால்கள் தேவை. ஆனால், முதலமைச்சர் விஜய் அமர்ந்திருக்கும் நாற்காலியின் ஒரு கால் இரவல் கால். மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை இரவலாகப் பெற்றுக்கொண்டுதான் விஜய் தற்பொழுது ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்" என்று உவமையுடன் பேசினார்.

எடப்பாடிவிஜய் எடப்பாடி

தவெக அரசு பொறுப்பேற்று 60 நாட்கள் ஆகியும் மக்களுக்கு எவ்வித ஆக்கப்பூர்வமான திட்டங்களையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், முதலமைச்சர் என்ற மிக உயரிய பதவியின் அந்தஸ்துக்கு விஜய் இன்னும் வரவில்லை. அவர் ஒரு முதலமைச்சரைப் போலப் பேசாமல், சாதாரண நாலாந்தரப் பேச்சாளரைப் போலப் பேசி வருகிறார்.

எவ்வித மக்கள் பணிகளையும் செய்யாமல், வெறும் திரைப்படப் 'பஞ்ச் டயலாக்' மட்டுமே பேசி விஜய் காலத்தைக் கடத்தி வருகிறார். முதலமைச்சர் பதவியில் இருப்பவர் பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளை யோசித்துப் பயன்படுத்த வேண்டும். ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளவர்களை எல்லாம் தங்களது கட்சியில் இணைத்துக் கொள்ளும் தவெக, தங்களைத் தூய சக்தி என்று சொல்லிக் கொள்ள எந்தத் தகுதியும் இல்லை.

எடப்பாடி

திமுக-அதிமுக கூட்டணி என்பது முழுக்க முழுக்க ஒரு கட்டுக்கதை என்று மறுத்த எடப்பாடி பழனிசாமி, திமுகவை எதிர்ப்பதில் அதிமுக என்றும் உறுதியாக இருக்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், "தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி என்று ஒன்று நடக்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், காவிரி நீர் விவகாரம் உள்ளிட்ட தமிழக மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்காகவும் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாகத் தொடர்ந்து முன்னின்று குரல் கொடுக்கும்" என்று உறுதியளித்தார்.