"முதல்வர் விஜய் மௌனப் புரட்சி செய்கிறார்!" - எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், இவ்விவகாரத்தில் அவர் விதண்டாவாதமாகச் செயல்பட்டு அமைதி காப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "காவிரி பிரச்சனை தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகா சென்று அம்மாநில அரசோடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இந்த முயற்சியைத் தமிழக முதல்வர் உடனடியாகக் கைவிட வேண்டும். கர்நாடக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது."
"காவிரியில் தமிழ்நாட்டிற்குரிய பங்கு நீரைத் திறக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடக அரசு ஒவ்வொரு ஆண்டும் மதிக்காமல் உதாசீனப்படுத்தி வருகிறது. தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசிக்க அங்கு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை."
"மேகதாது அணை மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகளின் குரலை முதலமைச்சர் விஜய் பொருட்படுத்துவதில்லை. அவர் மௌனப் புரட்சி செய்வதில் வல்லவராக உள்ளார்; தொடர்ந்து விதண்டாவாதமாகச் செயல்படுகிறார்" என எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். வரவிருக்கும் வேளாண் பட்ஜெட்டில் தமிழக விவசாயிகள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என்றும், தவறினால் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.
