100 நாள் ஆட்சியில் செய்த சாதனைகள்: பட்டியலிட்டு முதல்வர் விஜய் பெருமிதம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் விஜய், தவெக அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் ஆற்றிய சாதனைகள் மற்றும் நிறைவேற்றிய முக்கியத் திட்டங்களை விரிவாகப் பட்டியலிட்டார்.
ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் தேர்தல் வாக்குறுதியின்படி ஊழல் மற்றும் லஞ்சமற்ற நிர்வாகத்தை வழங்குவதில் முழு முனைப்போடு அரசு செயல்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இயங்கி வந்த 717 டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்குப் பயனளிக்கும் வகையில் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வெற்றிகரமாக வழங்கப்பட்டு வருகிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் பிரத்யேகமாக 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' அமைக்கப்பட்டு, அதற்காக 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் 37 மாவட்டங்கள் மற்றும் 9 மாநகரங்களில் 65 போதைப்பொருள் தடுப்புப் படைகள் அமைக்கப்பட்டு, போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பெருந்தலைவர் காமராஜர் பெயரிலான காலை உணவுத் திட்டம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 13 லட்சம் விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், நெல்மணிகளுக்கான ஊக்கத்தொகை வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டு, சன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ.2,750-ஆகவும், பொது ரகம் குவிண்டாலுக்கு ரூ.2,600-ஆகவும் வழங்கப்பட்டு வருகிறது.
பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது.
ஏழைப் பெண்களுக்கு உதவும் வகையில் 'தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம்' கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் பெண்கள் கட்டணமின்றிப் பயணம் செய்யும் 'வெற்றிப் பயணித் திட்டம்' வரவிருக்கும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளது.
ஏழை எளிய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் இலவசமாக வழங்கும் 'அன்னபூரணி சூப்பர் திட்டம்' வரும் பொங்கல் பண்டிகை முதல் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.
குடும்பத்திற்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு உதவித்தொகை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதல்முறையாக 70 வயதுக்கு மேற்பட்ட சுமார் 38 லட்சம் மூத்த குடிமக்களுக்கு வருமான வரம்பு எமின்றி இலவச மருத்துவச் சிகிச்சை வழங்கும் 'முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முந்தைய காலங்களில் முடங்கியிருந்த 630 அம்மா உணவகங்கள் முழுமையாகச் சீரமைக்கப்பட்டு மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் பிரத்யேகமாக 'சிங்கப்பெண் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ரூ.1,850 கோடி மதிப்பீட்டில் புதிய சாலைகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதன் முதற்கட்டப் பணிகள் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளன.
அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்களுக்குள்ளாகவே ரூ.1 லட்சம் கோடி அளவிலான தொழில்துறை முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, அதன் மூலம் 1,06,998 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பெருமைமிக்க நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
