செங்கோட்டையனை அமைச்சர் நாற்காலியில் அமர வைத்து அழகுப் பார்த்த முதல்வர் விஜய்!
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைமையிலான புதிய அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கான இலாகாக்கள் (துறைகள்) முறைப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, புதிய அமைச்சர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் தங்களது அறைகளில் கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்பேற்றுக் கொண்டனர். முன்னதாக, அமைச்சர்கள் அனைவரும் முதலமைச்சர் ஜோசப் விஜயைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை புதிய அமைச்சர்களான ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ராமன், ராஜ் மோகன், பிரபு மற்றும் கீர்த்தனா ஆகியோர் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இந்தச் சந்திப்பின் போது, அமைச்சர்கள் தங்களின் துறைகளில் எவ்வாறு திறம்படச் செயல்பட வேண்டும், மக்கள் நலத் திட்டங்களை எவ்விதம் கொண்டு சேர்க்க வேண்டும் மற்றும் அரசின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்து முதலமைச்சர் விரிவான அறிவுரைகளை வழங்கினார். அனைவரும் சிறப்பாகச் செயலாற்றி அரசுக்கு நற்பெயரை ஈட்டித் தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

முதலமைச்சரின் சந்திப்பிற்குப் பிறகு, அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் முறைப்படி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தங்களது அமைச்சரவை அறைகளில் கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்பேற்றுக் கொண்டனர். அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் அமைச்சர் ராஜ் மோகன், சக அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் தனது பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ராஜ் மோகன், தனது முதல் பணிகளாகக் கல்வித்துறை சார்ந்த முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார்.
தமிழகத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்குச் சுற்றுச்சுவர், வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூபாய் 80.64 கோடி மதிப்பிலான கோப்பில் அவர் கையெழுத்திட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மாதிரிப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான புதிய வகுப்பறைகள் மற்றும் தங்கும் விடுதிகள் கட்டுவதற்காக ரூபாய் 56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யும் கோப்பிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார். அமைச்சர்கள் தங்களின் துறைகளில் அடுத்தடுத்துப் பொறுப்பேற்றுப் பணிகளைத் தொடங்கியுள்ளதால், தலைமைச் செயலக வட்டாரம் தற்போது பெரும் சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறது.
