மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் விஜய் முதல் சந்திப்பு - தென் மண்டலக் குழு மாநாட்டில் சுவாரஸ்யம்!
செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் நடைபெறும் தென் மண்டலக் குழுவின் 31-வது மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைத் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேரில் சந்தித்து வரவேற்பு அளித்தார்.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைத் தமிழக முதல்வர் விஜய் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்கு வருகை தந்த அமித்ஷாவை ஆந்திர முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கானா துணை முதலமைச்சர் ஆகியோருடன் இணைந்து முதலமைச்சர் விஜய் வரவழைத்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்குத் தமிழக முதலமைச்சர் விஜய் துணைத் தலைவராகச் செயல்படுகிறார். இம்மாநாட்டில் கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினைகள், நதிநீர்ச் சிக்கல்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு, கடலோரப் பாதுகாப்பு மற்றும் மத்திய-மாநில அரசுகளுக்கிடையேயான உறவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
