இன்று குடியரசுத் தலைவர், சோனியா காந்தியுடன் முதல்வர் விஜய் முக்கிய சந்திப்பு.. நாளை !

 
விஜய் திரெளபதி விஜய் திரெளபதி

தமிழக முதலமைச்சர் விஜய், மூன்று நாள் அரசுப் பயணமாக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார். மதியம் 1 மணியளவில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வருகை தந்த அவருக்கு, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் மற்றும் உயர் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு விஜய் டெல்லிக்கு மேற்கொள்ளும் இரண்டாவது அதிகாரப்பூர்வப் பயணம் இதுவாகும். 

மாநில நலன் மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு தலைவர்களை முதலமைச்சர் விஜய் இன்று தனித்தனியாகச் சந்தித்துப் பேசுகிறார்.

இன்று மாலை 4 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை முதலமைச்சர் விஜய் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசுகிறார். அப்போது தமிழகத்தின் முக்கியத் திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர் சமர்ப்பிக்க உள்ளார்.

மாலை 5:45 மணிக்கு இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து வாழ்த்துப் பெறுகிறார். மாலை 6:00 மணிக்கு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சந்திப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் டி. ராஜாவைச் சந்தித்துப் பேசுகிறார்.

மாலை 6:30 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் முதலமைச்சர் விஜய் சந்திக்கிறார். தவெக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ள சூழலில், இந்த சந்திப்பு அரசியல் களத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

நாளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்பதே இப் பயணத்தின் முதன்மை நோக்கமாகும். இக்கூட்டத்தில் தமிழகத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகள், துறைமுக மேம்பாடு, நிதி ஒதுக்கீடு மற்றும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பது உள்ளிட்ட பல்வேறு மாநில நலன் சார்ந்த கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் முன்வைத்து உரை நிகழ்த்தவுள்ளார்.

முதலமைச்சருடன் அவரது நேர்முக உதவியாளர் ஜெகதீஷ், நண்பர்கள் விஷ்ணு ரெட்டி, ராஜ்குமார் உள்ளிட்ட 7 பேர் டெல்லி சென்றுள்ளனர். நாளை நிதி ஆயோக் கூட்டம் முடிந்த பிறகு, நாளை மறுதினம் ஜூன் 12 அன்று மங்களூரு வழியாக முதலமைச்சர் விஜய் சென்னை திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.