"விமர்சனங்களுக்கு முதல்வர் விஜய் பேரவையிலேயே பதிலளிக்க வேண்டும்!" - முத்தரசன் அறிக்கை!

 
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன்

சென்னை கோட்டையில் இன்று தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ள சூழலில், அவையில் எழும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்குள்ளேயே நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,  அண்மையில் தவெக அரசு அமைந்தபோது நடைபெற்ற சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, பிரதான எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புதிய அரசு மீதும், முதலமைச்சர் விஜய் மீதும் பல்வேறு கொள்கை சார்ந்த கடுமையான குற்றச்சாட்டுகளையும் விமரிசனங்களையும் முன்வைத்தன.

விஜய்

சட்டமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகள் எழுப்பும் கேள்விகளுக்கும், விமரிசனங்களுக்கும் முதலமைச்சர் அவையிலேயே எழுந்து நின்று முறைப்படி பதிலளிப்பதுதான் உன்னதமான நாடாளுமன்ற ஜனநாயக மரபாகும். அதை விடுத்து, சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து முடிந்து அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, அல்லது சட்டசபைக்கு வெளியே வந்து ஊடகங்கள் வாயிலாக அதற்குப் பதிலளிக்க முயல்வது முறையான அரசியல் நெறிமுறையாகாது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தவெக கூட்டணி அரசு, தங்களது ஆட்சிக்காலத்தின் முதல் முழுமையான மற்றும் விவாதங்கள் நிறைந்த சட்டமன்றக் கூட்டத்தொடரை இன்று எதிர்கொள்கிறது. "புதிய முதலமைச்சர் அவர்கள் அவையின் மாண்பினை உணர்ந்து, எதிர்க்கட்சிகள் எழுப்பும் சட்டம்-ஒழுங்கு, நிதிநிலை வெள்ளை அறிக்கை மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த விமரிசனங்களை எதிர்கொண்டு, அதற்குச் சட்டமன்றத்திலேயே உரிய விளக்கங்களை அளிக்க வேண்டும் என்பதே எங்களது முதன்மையான கோரிக்கையாகும்" என்று தெரிவித்துள்ளார். 

சட்டசபை விஜய்

இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியுள்ள இக்கூட்டத்தொடரில், மாநிலத்தின் தற்போதைய நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்யவுள்ளார். அதே நேரத்தில், மாநிலத்தில் அண்மையில் அரங்கேறியுள்ள கொடூரக் கொலைகள், மின்வெட்டுப் பிரச்சினைகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு மக்கள் சார்ந்த அத்தியாவசியப் பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவை கூட்டு வியூகம் வகுத்துள்ளதால், அதற்கு முதலமைச்சர் விஜய் அளிக்கவுள்ள பதில்களைக் காணத் தமிழக அரசியல் களம் காத்திருக்கிறது.