முதலமைச்சர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு!

 
ஐபிஎஸ் ஐஏஸ் போலீசார் மாநாடு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளின் மாநாடு நடைபெறவுள்ளதாகத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுத் தமிழக வெற்றிக் கழகம்  அரசு அமைந்த பிறகு, முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் முதல் முக்கிய அதிகாரிகள் மாநாடு இது என்பதால் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரத்தில் இது பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த இரண்டு நாள் மாநாடானது வரும் ஜூன் 29 மற்றும் ஜூன் 30 ஆகிய தேதிகளில் சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள 'நாமக்கல் கவிஞர் மாளிகை' கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

மாநாட்டில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள் துறைச் செயலாளர், டிஜிபி, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாநகரக் காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் நேரில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முதல்வர் விஜய்

சமீபகாலமாக அவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் சட்டம் ஒழுங்கு விவகாரங்களுக்கு மத்தியில் இந்த மாநாடு கூட்டப்படுவது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தில் பின்வரும் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, அதிகாரிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகளும் அறிவுரைகளும் வழங்கப்படவுள்ளன.

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரத்தைக் கூர்ந்து கவனித்து, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய கடுமையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தாமதமின்றி நீதி கிடைக்கவும் எடுக்க வேண்டிய அவசரக் கால வழிமுறைகள் விவாதிக்கப்படும்.

குற்றச் சம்பவங்கள் நடப்பதற்கு முன்பாகவே உளவுத்துறைத் தகவல்களின் அடிப்படையில் அதனைத் தடுப்பதற்கான நவீனக் காவல் முறைகளை நடைமுறைப்படுத்துதல். தவெக அரசின் முக்கியத் திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் தங்குதடையின்றி கடைக்கோடி மக்களையும் சென்றடைவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்தல்.

சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான கேள்விகளை எழுப்பி வரும் வேளையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவும், மாநிலத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும் முதலமைச்சர் விஜய் இந்த மாநாட்டைக் கூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.