ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் - தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்!

 
முதல்வர் விஜய்

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தவெக தலைமையில் புதிய கூட்டணி அரசு அமைந்துள்ள நிலையில், மாநிலத்தின் மிக முக்கிய நிதி ஆவணமான இந்த நிதியாண்டிற்கான (2026-2027) முதல் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கான ஆரம்பகட்ட நகர்வுகள் தற்போது கோட்டை வட்டாரத்தில் வேகமெடுத்துள்ளன. இப்புதிய பட்ஜெட் வரும் ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் அதிகாரப்பூர்வமாகச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் ஆண்டான நடப்பு 2026 பிப்ரவரி மாதத்தில், அப்போதைய திமுக அரசு சார்பில் தற்காலிகமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது புதிய அரசு பொறுப்பேற்றுள்ளதால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும், புதிய திட்டங்களைச் செயல்படுத்தும் வகையிலும் ஒரு முழுமையான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

விஜய் சட்டசபை கூட்டணி கவிழுமா

பட்ஜெட் தயாரிப்பின் முதற்கட்டமாக, வரும் ஜூலை 2-ஆம் தேதி முதல் ஜூலை 22-ஆம் தேதி வரை அனைத்து அரசுத் துறைகளுடனும் முதலமைச்சர் விஜய் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டங்களின் போது அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள், முதன்மைச் செயலாளர்கள் மற்றும் நிதித்துறை அமைச்சர் என். மேரி வில்சன் ஆகியோர் கலந்துகொண்டு, துறைகளின் தற்போதைய நிதித் தேவை மற்றும் புதிய அறிவிப்புகள் குறித்து விரிவாக விவாதிக்க உள்ளனர்.

விஜய் மகிழ்ச்சி கொண்டாட்டம் வெற்றிக்

சமீபத்தில் ஜூன் 16 அன்று தவெக அரசு வெளியிட்ட தமிழக நிதி நிலைமை குறித்த 'வெள்ளை அறிக்கை'யில், பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்து தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடன் சுமை ₹13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சர் மேரி வில்சன் தெரிவித்திருந்தார். மேலும், வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுகளில் உள்ள முறைகேடுகளைக் களைந்து, இந்த ஆண்டிலேயே கூடுதலாக ₹20,000 கோடி வருவாயை ஈட்ட அரசு திட்டமிட்டுள்ளது.

எனவே, இந்த கடுமையான நிதிப் பற்றாக்குறை மற்றும் கடன் சுமைக்கு மத்தியிலும், தவெக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த 'மகளிருக்கான முக்கிய நிதி உதவிகள்' மற்றும் 'விவசாயக் கடன் தள்ளுபடி' போன்ற பிரதான வாக்குறுதிகளுக்கு இந்த முதல் பட்ஜெட்டில் எவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யப் போகிறது என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.