பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் - நாளை சென்னையில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்!
தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான தொடக்க விழா நாளை சென்னையில் நடைபெறவுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வந்த காலை உணவுத் திட்டம், தேர்தல் வாக்குறுதியின்படி தற்போது 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் நாளை நடைபெறும் விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்க உள்ளார். இத்திட்ட விரிவாக்கத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவர்கள் கூடுதலாகப் பயன்பெற உள்ளனர்.
பள்ளி மாணவர்களின் வயிற்றுப் பசியுடன் கல்விப் பசியையும் போக்கிய பெருந்தலைவர் காமராஜரின் வழியில் நடக்கும் தவெக அரசு, இத்திட்டத்தைப் 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனப் பெயர் மாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
