அமித் ஷாவைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்... நாளை கோவளத்தில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு!

 
அமித் ஷா விஜய் அமித்ஷாவிஜய்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 31-வது தென்னக மண்டலக் குழு மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள பிஷர்மேன் கோவ் நட்சத்திர ஓட்டலில் நாளை ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கும் இம்மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், நீர்வளப் பகிர்வு (காவிரி நதிநீர் பிரச்சினை), குற்றங்கள் தடுப்பு மற்றும் எல்லைப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. எம்பி தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் தென்னக மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதால், இதுவே மாநாட்டின் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேகதாது

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, மத்திய அமைச்சர் அமித் ஷாவை விஜய் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். டெல்லி பயணத்தின் போது சந்திக்க இயலாத சூழலில், இம்மாநாட்டின் போதான சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி நதிநீர் பகிர்வு விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையே நிலவும் சிக்கல்கள் குறித்து, தமிழக முதலமைச்சர் விஜய்யும் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாரும் தனியாகச் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவிரி மேகதாது

மாநாட்டை முன்னிட்டு கோவளம், கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் விருந்தினர்கள் தங்கும் விடுதிப் பகுதிகளில் தீவிர காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், தற்காலிகப் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வரும் மத்திய அமைச்சர் அமித் ஷா, கோவளத்தில் இரவு தங்கி மாநாட்டை முடித்த பிறகு மீண்டும் டெல்லிக்குப் புறப்படுகிறார். அதற்கு முன்னதாக 6 மாநில உயர் அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டமும் நடைபெறவுள்ளது.