இன்று கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. 10 கி.மீ. ரோடு ஷோ.. பாதுகாப்பு பணியில் 6700 போலீசார்!
இன்று காலை தமிழக முதலமைச்சர் விஜய் கரூர் செல்கிறார். கரூரில் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடுஷோ நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காலை 9:30 மணி அளவில் முதலமைச்சர் விஜய் கரூர் வந்தடைந்த பின்னர், அங்குப் பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டும் வகையில் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிற்குப் பிரம்மாண்ட ரோடுஷோ நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சரின் வருகையை ஒட்டி நகரின் முக்கிய வீதிகள் மற்றும் சந்திப்புகள் விழாக்கோலம் பூண்டுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பந்தல் அமைக்கும் பணியில் சிறிய விபத்து ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டும், முதலமைச்சரின் ரோடு ஷோவிற்குப் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளன.
எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் மண்டலக் காவல் தலைவர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 6,700-க்கும் மேற்பட்ட போலீசார் கரூர் முழுவதும் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தின் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது.
கரூர் செல்லும் முதலமைச்சர் விஜய், விபத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து தங்களது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிக்க உள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில், தகுதியின் அடிப்படையில் 32 நபர்களுக்குக் கருணை அடிப்படையிலான அரசுப் பணி நியமன ஆணைகளையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் நேரடியாக வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
