டெல்லியில் இருந்து கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் செல்கிறார் முதலமைச்சர் விஜய்!
மூன்று நாள் அதிகாரப்பூர்வ அரசுப் பயணமாக இன்று டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், தனது பயணத் திட்டத்தின் இறுதிப் பகுதியாகக் கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் செல்லவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாளை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார். இக்கூட்டம் முடிந்த பின்னர், அவரது பயண வழித்தடம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஜூன் 12ம் தேதி வெள்ளிக்கிழமை காலை டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் கர்நாடக மாநிலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு முதலமைச்சர் விஜய் வந்தடைகிறார்.

மங்களூரு விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் பகுதிக்கு அவர் காரில் பயணிக்க உள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், சௌபர்ணிகா நதிக்கரையில் அமைந்துள்ள மிக சக்திவாய்ந்த ஆன்மிகத் தலமான ஸ்ரீ மூகாம்பிகை தேவி கோயிலில் முதலமைச்சர் விஜய் சிறப்புத் தரிசனம் செய்யவுள்ளார்:
முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு விஜய் இக்கோயிலுக்கு மேற்கொள்வது இதுவே முதல் ஆன்மிகப் பயணமாகும். கோயிலில் தவெகவின் வெற்றிக்காகவும், மாநில மக்களின் நலனுக்காகவும் அவர் சிறப்புப் பூஜைகள் மற்றும் அர்ச்சனை செய்து வழிபடவுள்ளதாகக் கூறப்படுகிறது.

முதலமைச்சரின் வருகையை ஒட்டி மங்களூரு மற்றும் உடுப்பி மாவட்டக் காவல் துறையினர் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தரிசனத்தை முழுமையாக முடித்துக் கொண்ட பிறகு, முதலமைச்சர் விஜய் மீண்டும் மங்களூரு விமான நிலையம் திரும்பி, அங்கிருந்து தனி விமானம் மூலம் ஜூன் 12ம் தேதி இரவு சென்னை திரும்புவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
