விமான நிலையம் வரை காரைத் தானே ஓட்டி வந்த முதல்வர் விஜய்!

 
விஜய்கார் கார்விஜய் விஜய்கார் கார்விஜய்

தமிழக முதலமைச்சர் விஜய், டெல்லி மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கான தனது முக்கியப் பயணங்களை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு விமானம் மூலமாகச் சென்னை திரும்பியுள்ளார். முன்னதாக, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மிக முக்கியமான நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு டெல்லியிலேயே இரவு தங்கிய அவர், நேற்று கர்நாடக மாநிலம் உடுப்பியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயத்திற்குச் சென்று சாமி தரிசனம் செய்யத் திட்டமிட்டார். இதற்காகத் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கர்நாடகாவின் மங்களூரு வந்தடைந்த முதலமைச்சர் விஜய், அங்கிருந்து சுமார் 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குப் பலத்த பாதுகாப்புடன் காரில் புறப்பட்டுச் சென்றார்.

கொல்லூர் மூகாம்பிகை  விஜய்

நேற்று பிற்பகல் 3 மணியளவில் மூகாம்பிகை அம்மன் ஆலயத்திற்குச் சென்ற அவர், அம்மனை மனமுருகி அர்ச்சனை செய்து தரிசித்தார். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்தச் சிறப்புத் தரிசனத்தின் போது, ஆலயத்திற்குத் தனது தனிப்பட்ட காணிக்கையாகச் சுமார் 1.5 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட வெள்ளி வாள் ஒன்றையும் வழங்கினார். 

கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் தரிசனம் முழுமையாக முடிந்ததும், முதலமைச்சர் விஜய் சென்னை திரும்புவதற்காக மீண்டும் மங்களூரு விமான நிலையத்திற்குத் தனது பாதுகாப்புப் பரிவாரங்களுடன் காரில் புறப்படத் தயாரானார். அப்போது, தனது காரில் ஏறிய முதலமைச்சர் விஜய், திடீரென தனது ஓட்டுநரிடம் "காரை நானே ஓட்டவா?" என்று புன்னகையுடன் கேட்டுவிட்டு, உடனடியாக ஓட்டுநர் இருக்கைக்கு மாறினார். இதனால் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

கொல்லூர் விஜய் வாள்

கொல்லூர் கோவிலில் இருந்து மங்களூரு விமான நிலையம் வரை உள்ள நீண்ட தூரச் சாலையெங்கும், சுற்றியிருந்த பாதுகாப்பு வாகனங்களின் அணிவகுப்பிற்கு நடுவே முதலமைச்சர் விஜய்யே ஸ்டேரிங்கை கையில் பிடித்துக் காரைத் துள்ளலாகவும், கம்பீரமாகவும் ஓட்டி வந்தார். விமான நிலையம் வரை காரை அவரே ஓட்டி வந்த இந்த தகவல்  அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மங்களூரு விமான நிலையத்தை வந்தடைந்ததும், அங்கிருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் சென்னைக்குப் புறப்பட்டார்.