சென்னை கடற்கரை, பூங்காக்களில் விரைவில் இலவச 'வை-ஃபை' வசதி - முதல்வர் விஜய் உத்தரவு!
முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின்படி, மெரினா உட்படச் சென்னையின் முதன்மையான கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் பொதுமக்களுக்கு இலவச வை-ஃபை வசதியை வழங்குவதற்கான முதற்கட்டப் பணிகள் தீவிரமாகத் தொடங்கியுள்ளன. சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் தலைமையில் இதற்கான சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முன்னணி இணையச் சேவை நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, ஹாத்வே மற்றும் ஏசிடி ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை மற்றும் முக்கிய மாநகராட்சிப் பூங்காக்களில் அதிவேக இலவச வை-ஃபை சேவையை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பொதுமக்களுக்குத் தடங்கலற்ற, உயர்தர இணையச் சேவையைச் சீராக வழங்குவதற்கான தொழில்நுட்ப வசதிகள் குறித்து நிறுவனப் பிரதிநிதிகளுடன் விரிவாக விவாதிக்கப்பட்டது.
