அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறைக்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்!

 
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஒரு சுவாரசியமான மற்றும் நெகிழ்ச்சியான நிகழ்வு அரங்கேறியுள்ளது. புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ள சூழலில், பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அலுவலக அறைக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து அண்மையில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கப்பட்டன. இதில் பொதுப்பணித்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஆதவ் அர்ஜுனா பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில், இன்று மாலை சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலக வளாகத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய், வழக்கமான நடைமுறைகளைத் தாண்டி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பிரத்யேக அலுவலக அறைக்கே  நேரில் சென்றார். முதலமைச்சரின் இந்த திடீர் வருகையால் தலைமைச் செயலக வட்டாரமே சற்று வியப்பில் ஆழ்ந்தது.

ஆதவ் அர்ஜுனா

அலுவலக அறைக்கு வந்த முதலமைச்சரை, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மலர்க்கொத்து கொடுத்து நெகிழ்ச்சியுடன் வரவேற்றார். தொடர்ந்து, புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்தச் சந்திப்பின் போது வெறும் வாழ்த்துகளோடு மட்டுமில்லாமல், துறையின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்தும் இருவரும் சுருக்கமாகக் கலந்துரையாடினர். குறிப்பாகத் தமிழகத்தில் நிலுவையில் உள்ள பொதுப்பணித்துறைத் திட்டங்களை விரைந்து முடிப்பது, கிராமப்புற மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலான புதிய மக்கள் நலத்திட்டங்களை வகுப்பது மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்து முதலமைச்சர் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியதாகத் தெரிகிறது.

வலுவாகும் அரசியல் களம்:
புதிய அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அமைச்சரவை விரிவாக்கம், கூட்டணிக்குள்ளான சலசலப்புகள் எனத் தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வரும் வேளையில், முதலமைச்சர் விஜய் நேரடியாகத் தனது அமைச்சரின் அறைக்குச் சென்று வாழ்த்து தெரிவித்து, நிர்வாகப் பணிகளைத் முடுக்கிவிட்டுள்ளது த.வெ.க தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.