முதலமைச்சர் விஜய் தலைமையில் வரும் 16-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் – பட்ஜெட்டுக்கு ஒப்புதல்!
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தவெக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையில் வரும் ஜூலை 16-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியில் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகியவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளன. புதிய அரசின் முதல் பட்ஜெட் என்பதால், தவெகவின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள், குடும்பத் தலைவிகளுக்கான சிறப்புத் திட்டங்கள் மற்றும் பொதுமக்களைக் கவரும் வகையிலான புதிய அறிவிப்புகள் இதில் இடம் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் ஜூலை 22-ஆம் தேதி வரை துறை வாரியாக அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.
நிதிநிலை அறிக்கை தயாரிப்புப் பணிகளுக்கு இடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மாநாட்டு கூட்ட அரங்கில் வரும் ஜூலை 16ம் தேதி காலை 10.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் கூடவுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், முக்கியத் துறைச் செயலாளர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த உயர்மட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் பின்வரும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இறுதி கட்டத்தை எட்டியுள்ள பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டின் வரைவு அறிக்கைக்கு இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் நோக்கில், புதிய தொழில் முதலீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான அனுமதிகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படவுள்ளது.
புதிய அரசு பொறுப்பேற்ற பின் நடைபெறும் மிக முக்கியமான அமைச்சரவைக் கூட்டம் இது என்பதால், தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
