முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உயர்மட்ட மாநாடு!
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைந்த பிறகு, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் நடைபெறும் முதலாவது ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் உயர் அதிகாரிகளின் இரண்டு நாள் மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்குகிறது.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள 'நாமக்கல் கவிஞர் மாளிகையில்' இன்றும் நாளையும் (ஜூன் 29, 30) என இரண்டு நாட்கள் இந்த உயர்மட்ட மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காகத் தமிழகப் போலீஸ் டி.ஜி.பி, அனைத்து அரசுத் துறை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் , சரக டி.ஐ.ஜிக்கள் மற்றும் வனத் துறை உயர் அலுவலர்கள் எனப் பலரும் சென்னைக்கு வருகை தந்துள்ளனர்.

மாநிலத்தின் ஒட்டுமொத்த நிர்வாகச் சக்கரத்தையும் சீரமைக்கும் நோக்கில், இந்த மாநாட்டை 3 முக்கிய அமர்வுகளாகப் பிரித்து நடத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தீவிரக் கண்காணிப்பு: உளவுத் தகவல்கள் சேகரிப்பை வலுப்படுத்துதல், நீதிமன்றப் பிடி ஆணைகளைச் செயல்படுத்துவது, தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள் மற்றும் ஜாமீனில் வெளிவந்துள்ள குற்றவாளிகளைத் தீவிரமாகக் கண்காணிப்பது குறித்து இதில் ஆலோசிக்கப்படுகிறது.
'சிங்கப்பெண்' அதிரடிப்படையின் செயல்பாடுகள், போக்சோ வழக்குகளின் தற்போதைய நிலை மற்றும் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை ஒடுக்குவது குறித்து விவாதிக்கப்படுகிறது. கல்வி நிறுவனங்களுக்கு அருகே போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் தடுப்பது, கள்ளச்சாராயத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவது மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
மாவட்ட கலெக்டர்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த அமர்வில், அரசின் முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள் அடித்தட்டு மக்களுக்குத் தடையின்றிச் சென்றடைகிறதா, அதில் உள்ள நிர்வாகத் தடங்கல்கள் என்னென்ன என்பது குறித்து முதல்வர் விரிவாக ஆய்வு நடத்துகிறார். மாவட்ட கலெக்டர்கள் மற்றும் ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் இணைந்து வனப் பாதுகாப்பு, பருவநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பசுமைத் தமிழகம் திட்டங்களின் முன்னேற்றம் குறித்துக் கலந்தாலோசிக்க உள்ளனர்.

அரசியல் முக்கியத்துவம்: தவெக அமைச்சரவையின் மீது எதிர்க்கட்சியான திமுக போதைப்பொருள் விவகாரத்தைக் கையில் எடுத்து இன்று மாநிலம் தழுவிய போராட்டம் அறிவித்துள்ள சூழலிலும், சட்டம்-ஒழுங்கு நிலை குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையிலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பை முதன்மைத் தலைப்பாகக் கொண்டு முதல்வர் விஜய் கூட்டியுள்ள இந்த முதல் அதிகாரப்பூர்வ மாநாடு தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இரண்டு நாட்களாக நடைபெறும் இந்த மாநாட்டின் இறுதி நாளான நாளை மாலை, சிறப்பாகவும் திறமையாகவும் செயல்பட்ட மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளைப் பாராட்டி முதலமைச்சர் விஜய் அவர்கள் விருதுகளையும் பரிசுகளையும் வழங்கிக் கௌரவிக்க உள்ளார்.
