"கர்மவீரர் காமராஜரின் புகழ் ஓங்குக" - காமராஜரின் 124-வது பிறந்தநாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!

 
காமராஜர்

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் விஜய் இன்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வாழ்த்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், காமராஜரின் தொலைநோக்குத் திட்டங்களையும் அவரது தூய்மையான அரசியல் வாழ்வையும் போற்றிப் பாராட்டியுள்ளார். "கிராமங்கள் தோறும் தொடக்கப் பள்ளிகளை அமைத்து, கல்வி என்பது சிலருக்கு மட்டுமேயானதாக இல்லாமல், சமூகத்தின் அடித்தட்டு மக்கள் உட்பட அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்தவர் பெருந்தலைவர் காமராஜர். பள்ளிக்கு வரும் ஏழை எளிய மாணவர்களின் பசியைப் போக்கி, அவர்களின் கல்விப் பயணம் தடையின்றித் தொடர மதிய உணவுத் திட்டத்தை மிகச் சிறப்பாக அறிமுகப்படுத்திய அவரது தியாக உள்ளத்தை இந்த நன்னாளில் நன்றியோடு நினைவுகூர்கிறேன்."

காமராஜர்

மேலும், காமராஜரின் ஆட்சிக்காலம்தான் தமிழகத்தின் பொற்காலம் என்பதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தமிழ்நாட்டின் தற்போதைய பெரிய அளவிலான விவசாயம் மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் காமராஜர் தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் அவர் கடைப்பிடித்த உன்னதமான "எளிமை மற்றும் நேர்மை" ஆகிய உயரிய பண்புகளை நாம் என்றென்றும் போற்றிப் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்ட முதலமைச்சர் விஜய், "கர்மவீரர் காமராஜரின் புகழ் ஓங்குக" என்று உணர்வுபூர்வமாகத் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.

பெருந்தலைவரின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் 'கல்வி வளர்ச்சி நாளாகக்' கொண்டாடப்பட்டு வரும் வேளையில், முதலமைச்சரின் இந்த வாழ்த்துப் பதிவு அரசியல் வட்டாரத்திலும், இணையத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.