முதல்வர் விஜய் பங்கேற்கும் போலியோ முகாமில் கடும் நெருக்கடி.. பெற்றோர், குழந்தைகள் வெயிலில் அவதி!

 
நெருக்கடி குழந்தைகள்

சென்னை பாலவாக்கத்தில் தமிழக முதல்வர் விஜய் அவர்கள் பங்கேற்கும் போலியோ சொட்டு மருந்து முகாமில் போதிய உள்கட்டமைப்பு மற்றும் இடவசதி செய்யப்படாததால், தங்களது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வந்திருந்த ஏராளமான பெற்றோர் கடுமையான கூட்ட நெரிசலிலும் வெயிலிலும் தவித்து அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நாடு தழுவிய போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெற்று வரும் நிலையில், சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் இதற்கான பிரத்யேக சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமிற்கு நேரில் வந்து குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்தை வழங்கி, முகாமைத் தொடங்கி வைக்கத் தமிழக முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார்.

முதல்வர் பங்கேற்கும் மிக முக்கிய முகாம் என்பதால், பாலவாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெற்றோர் அதிகாலை முதலே தங்களது குழந்தைகளுடன் முகாம் நடைபெறும் அரசுப் பள்ளிக்கு வரத் தொடங்கினர்.

போலியோ

பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் வெறும் 35 நபர்கள் மட்டுமே அமரும் வகையில் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இதனால், தங்களது கைக்குழந்தைகளுடன் வந்திருந்த நூற்றுக்கணக்கான பெற்றோருக்கு அமர இடமில்லாமல் போனது. மேலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், திறந்தவெளியில் குழந்தைகளுடன் நீண்ட நேரம் நிற்க முடியாமல் அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

வளாகத்திற்குள் மக்கள் கூட்டம் அலைமோதியதைத் தொடர்ந்து, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கிருந்த மக்களைப் பந்தல் பகுதியிலிருந்து வெளியேறி, நிழலான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

நிழல் தேடி அலைச்சல்: ஆனால், பள்ளி வளாகத்தில் போதிய நிழற்குடைகள் இல்லாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் வேறு வழியின்றி அங்கிருந்த ஆம்புலன்ஸ் வாகனங்களின் நிழலிலும், பள்ளிக் கட்டிடங்களின் மிகக் குறுகிய ஓரங்களிலும் தங்களது குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வெயிலில் இருந்து தப்பிக்க ஒதுங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டது.

முதல்வர் வரவிருக்கும் ஒரு முக்கிய அரசு விழாவில், பொதுமக்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் தேவையான அடிப்படை நிழல் மற்றும் அமரும் வசதிகளை மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் முறையாகத் திட்டமிட்டுச் செய்யாதது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.