முதலமைச்சர் மாநில இளைஞர் விருது... விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 13 வரை நீட்டிப்பு!

 
தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

சமுதாய வளர்ச்சி மற்றும் சமூக நலனுக்காகத் தன்னார்வத்துடன் மிகச் சிறந்த சேவையாற்றி வரும் தமிழக இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின் போது 'முதலமைச்சர் மாநில இளைஞர் விருது' வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 15, 2026 அன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ள இந்த விருதிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள், தற்போது ஜூலை 13-ஆம் தேதி மாலை 5:45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநில விருதுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் 15 முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். (அதாவது, 01.04.2025 அன்று 15 வயது நிரம்பியவராகவும், 31.03.2026 அன்று 35 வயதிற்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும்). விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் கடந்த 5 ஆண்டுகளாகத் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் மற்றும் அதற்கான முறையான இருப்பிடச் சான்றினை இணைக்க வேண்டும்.

முதல்வர் விஜய்

கடந்த நிதியாண்டில் (01.04.2025 முதல் 31.03.2026 வரை) சமுதாய நலனுக்காகத் தன்னார்வ அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட, உறுதிப்படுத்தக்கூடிய மற்றும் அளவிடக்கூடிய சமூகச் சேவைகள் மட்டுமே தகுதிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் அரசுப் பணியில் இருப்பவர்கள் இந்த விருதிற்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் ஆவர்.

ஆண்டுதோறும் தகுதியின் அடிப்படையில் 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என மொத்தம் 6 சிறந்த இளைஞர்கள் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 1,00,000 (ஒரு லட்சம் ரூபாய்) ரொக்கப் பரிசு வழங்கப்படும். இத்துடன் ஒரு பாராட்டுப் பத்திரமும் (சான்றிதழ்) மற்றும் தங்கப் பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்படும்.

தகுதியும், சமூகச் சேவையில் ஆர்வமும் உள்ள இளைஞர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) அதிகாரப்பூர்வ இணையதளமான www.sdat.tn.gov.in என்ற முகவரியின் வாயிலாக மட்டுமே தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். தகுதியுடைய நபர்கள் நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் (ஜூலை 13, மாலை 5.45 மணிக்குள்) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.