பகீர்... ஒரு வயது குழந்தை உடலில் 51 இடங்களில் காயங்கள்... கொடுமைப்படுத்திக் கொலை செய்த தாய் !

 
kerala kerala

கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு  வயது  ஆண் குழந்தை ஒன்று, கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தது. உணவுக்குழாயில் உணவு சிக்கியதால் குழந்தை மயங்கி விழுந்துவிட்டதாகக் கூறி, அவரது தாயின் இரண்டாவது கணவரான அஷ்கர் என்பவர் குழந்தையைத் திருவனந்தபுரம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். ஆனால், மருத்துவமனைக்கு அனுமதித்த சில நிமிடங்களிலேயே அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அந்தக் குழந்தையின் உடலில் 50-க்கும் மேற்பட்ட கொடூரமான காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தையின் உடலில் தீக்காயங்கள், எலும்பு முறிவுகள் மற்றும் தலையில் பலத்த உள் ரத்தக் கசிவு ஏற்பட்டதே மரணத்திற்கு முக்கியக் காரணம் என மருத்துவர்கள் உறுதி செய்தனர். தனது வாழ்க்கைக்குக் குழந்தை இடையூறாக இருப்பதாகக் கருதி, அஷ்கர் குழந்தையைத் தொடர்ந்து கொடூரமாகத் தாக்கி வந்ததும், அதற்குத் தாய் அகிலா உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இந்தக் கொடூரச் செயல் குறித்துத் தகவல் அறிந்த நெடுமங்காடு போலீசார், குழந்தையின் மரணத்திற்குப் பொறுப்பான தாய் அகிலா மற்றும் அவரது இரண்டாவது கணவர் அஷ்கர் ஆகிய இருவரையும் உடனடியாகக் கைது செய்தனர். மேலும், அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.