சவப்பெட்டிக்குள் முனகல் சத்தம்! இறந்துவிட்டதாக கருதப்பட்ட 70 வயது மூதாட்டி உயிருடன் இருந்த அதிர்ச்சி.. 2 நாட்களில் மீண்டும் மரணம்

 
சவப்பெட்டி

 

சீனாவில் இறந்துவிட்டதாக கருதப்பட்ட 70 வயது மூதாட்டி ஒருவர் சவப்பெட்டிக்குள் உயிருடன் இருந்தது தெரியவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த எதிர்பாராத சம்பவத்துக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் மீண்டும் உயிரிழந்தார்.வட சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் உள்ள சாங்ஜோவ் பகுதியைச் சேர்ந்த அந்த மூதாட்டி, பல ஆண்டுகளாக மூளைத் தமனியில் ரத்த உறைவு பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், அவருக்கு புற்றுநோயும் தீவிரமடைந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிகிச்சை பலனளிக்காது என மருத்துவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, குடும்பத்தினர் அவரை வீட்டிற்கு அழைத்து வந்து கவனித்து வந்தனர்

இந்த நிலையில், செப்டம்பர் 8-ம் தேதி மூதாட்டியின் உடலில் அசைவு மற்றும் உயிர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என குடும்பத்தினர் கருதி, அவர் உயிரிழந்துவிட்டதாக முடிவு செய்தனர். தொலைதூரத்தில் இருந்த உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்த வருவதற்காக, உடலை குளிரூட்டும் வசதி கொண்ட சவப்பெட்டியில் வைத்திருந்தனர்.ஆனால் மறுநாள் மாலை சவப்பெட்டியின் அருகில் இருந்த மருமகளுக்கு, உள்ளிருந்து லேசான முனகல் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக சவப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது, மூதாட்டி சுவாசித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை வெளியே எடுத்தனர்.

செப்டம்பர் 11-ம் தேதி உறவினர்கள் வந்தபோது, மூதாட்டி கண்களைத் திறந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அவரால் பேசவோ உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்ளவோ முடியவில்லை.அதே செப்டம்பர் 11-ம் தேதி இரவு மூதாட்டி மீண்டும் உயிரிழந்தார். இதையடுத்து செப்டம்பர் 13-ம் தேதி அவரது இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து மருத்துவ நிபுணர்கள், மிகவும் மோசமான உடல்நிலையில் இருக்கும் சிலருக்கு இதயத் துடிப்பு மற்றும் சுவாசம் மிகவும் குறைந்து, வெளிப்படையாக உயிரற்ற நிலையில் தோன்றக்கூடிய “apparent death” போன்ற நிலை இருக்கலாம் என்று விளக்கியுள்ளனர். இருப்பினும், இந்த குறிப்பிட்ட சம்பவத்துக்கு மருத்துவ ரீதியான முழுமையான காரணம் அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தப்படவில்லை.இறப்பை உறுதி செய்யும் முன் முறையான மருத்துவ பரிசோதனை மற்றும் அதிகாரப்பூர்வ மரணச் சான்றிதழ் பெறுவதன் அவசியம் குறித்தும் இந்த சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.