முதல் மின்சார பயணிகள் விமானம்... மனிதர்களுடன் பறந்து சாதனை... வைரல் வீடியோ!

 
சைனா

சீனாவில் தயாரிக்கப்பட்ட 19 இருக்கைகள் கொண்ட மின்சார விமானம், முதல் முறையாக மனிதர்களுடன் வெற்றிகரமாக சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளது. இதன் மூலம் மின்சார விமானப் போக்குவரத்தில் சீனா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

சீன அரசுக்கு சொந்தமான விமான தயாரிப்பு நிறுவனமான கோமாக் (COMAC), பேட்டரி தயாரிப்பு நிறுவனமான சி.ஏ.டி.எல். மற்றும் ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சி.இ.-25ஏ (CE-25A) என்ற மின்சார விமானத்தை உருவாக்கியுள்ளது.

கடந்த 14-ம் தேதி கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணம் பின்சோ நகரில் இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில் 2 விமானிகள் மற்றும் ஒரு விமான சோதனை பொறியாளர் பயணம் செய்தனர். மொத்தம் 57 நிமிடங்கள் 46 விநாடிகள் நடைபெற்ற சோதனையில், விமானம் 16 நிமிடங்கள் 38 விநாடிகள் வானில் பறந்து 60.4 கி.மீ., தூரத்தை கடந்தது.

10 டன் எடை கொண்ட இந்த விமானத்தில் 19 பேர் பயணிக்க முடியும். மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கி.மீ., வரை பயணிக்கலாம்.

ஏற்கனவே 19 ஆளில்லா சோதனை ஓட்டங்களை நிறைவு செய்துள்ள இந்த விமானம், தற்போது வணிகப் பயன்பாட்டுக்கான சான்றிதழ் பெறும் நடைமுறையில் உள்ளது.