இரவு முழுவதும் 868 முறை தானாக பார்க்கிங் செய்ய முயன்ற மின்சார கார்... வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!

 
சைனா கார்

 

சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு வாகன நிறுத்துமிடத்தில், ஓட்டுநர் இல்லாத மின்சார கார் ஒன்று இரவு முழுவதும் 868 முறை தானாகவே பார்க்கிங் செய்ய முயன்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அதிகாலை 3 மணியளவில் தரைதள பார்க்கிங் பகுதியில் வழக்கத்திற்கு மாறான சத்தங்கள் கேட்டதை அடுத்து பாதுகாப்பு ஊழியர் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, உள்ளே ஓட்டுநர் யாரும் இல்லாத நிலையில், அந்த மின்சார கார் முன்னும் பின்னுமாக நகர்ந்து மீண்டும் மீண்டும் பார்க்கிங் செய்ய முயற்சிப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் காரின் உரிமையாளர் கணினிப் பதிவைச் சரிபார்த்தபோது, தானியங்கி பார்க்கிங் செயல்பாடு ஒரே இரவில் 868 முறை இயக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இறுதியாக அந்த கார் மற்றொரு வாகனத்தின் அருகே சென்று நின்றது.மென்பொருள் கோளாறு காரணமாக இது நடந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் காருக்கு ஓசிடி வந்துவிட்டதா என நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.