திருமணம் ஆகாவிட்டால் ரூ.28000 பணம் வாபஸ்... சீன டேட்டிங் செயலியின் வித்தியாசமான திட்டம்!
சீனாவில் திருமணத்துக்குத் துணை தேடுபவர்களைக் கவரும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் செயல்படும் டேட்டிங் செயலி ஒன்று வித்தியாசமான உத்தரவாதத்தை அறிவித்துள்ளது. இந்தச் செயலியைப் பயன்படுத்தியும் மூன்று ஆண்டுகளுக்குள் திருமணம் நடைபெறாவிட்டால், கட்டணத்தை முழுமையாகத் திருப்பித் தருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஷென்சென் நகரைச் சேர்ந்த 'லியாங்பெய் ஏஐ' (Liangpei AI) என்ற இந்தச் செயலியில் உறுப்பினராக 2,000 சீன யுவான் கட்டணம் செலுத்த வேண்டும். இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.28,155 ஆகும்.
இந்தச் செயலியின் தனிச்சிறப்பு, ஒரே நேரத்தில் பலருடன் பேச முடியாது என்பதுதான். ஒரு பயனருக்கு ஒரே நேரத்தில் ஒருவர் மட்டுமே அறிமுகப்படுத்தப்படுவார். அந்தத் தொடர்பு முடிவுக்கு வந்த பிறகே அடுத்த நபரைத் தேர்வு செய்ய முடியும்.
மேலும், பயனர்களிடம் செயற்கை நுண்ணறிவு சுமார் 20 நிமிடங்கள் உரையாடி, குடும்பப் பின்னணி, கல்வி, வேலை, விருப்பங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட விவரங்களைச் சேகரிக்கிறது. அதன் அடிப்படையில் பொருத்தமான துணையைப் பரிந்துரைக்கிறது.
திருமணமானவர்கள் போலியாகப் பதிவு செய்வதைத் தடுக்க அடையாளம் மற்றும் திருமணமாகாதவர் என்பதற்கான சரிபார்ப்பும் மேற்கொள்ளப்படுகிறது. 2026 ஜூலையில் தொடங்கப்பட்ட இந்தச் செயலியின் மூன்று ஆண்டு உத்தரவாதம் முதன்முறையாக 2029 ஜூலையில்தான் சோதிக்கப்படும்.
