இந்தியா - ஜப்பான் உறவுக்குச் சீனா எச்சரிக்கை!

 
சீனா

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் சனாயே தகைச்சி இடையேயான இருதரப்புப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு வலுப்பெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில், இருநாடுகளின் உறவு குறித்துச் சீனா தனது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாகப் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன், நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு என்பது எந்தவொரு சூழ்நிலையிலும் ஒரு மூன்றாவது நாட்டை (சீனாவை) குறிவைத்தோ அல்லது அந்த நாட்டின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலோ அமையக் கூடாது.

இரு நாடுகளின் கூட்டு முயற்சி என்பது பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்கு இடையேயான புரிதலையும், பரஸ்பர நம்பிக்கையையும் மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். மாறாக, பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக மாறக் கூடாது.

இந்தியாவும் ஜப்பானும் கனிம வளங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மையில் தங்களது கூட்டாண்மையை வலுப்படுத்தியுள்ள நிலையில், சீனா தனது எச்சரிக்கையை விடுத்துள்ளது. "இருதரப்பு ஒத்துழைப்பு என்ற பெயரில், தங்களுக்குள் பிரத்யேகச் சிறிய குழுக்களை அல்லது கூட்டணிகளை உருவாக்கி, அதன் மூலம் பிராந்தியத்தில் பிரிவினையையும் மோதலையும் தூண்டுவதற்கு யாரும் முயலக் கூடாது. உலகளாவிய தொழில் மற்றும் விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பாகவும் நிலையானதாகவும் வைத்திருப்பது அனைத்து நாடுகளின் கூட்டுப் பொறுப்பாகும்."

கிழக்கு மற்றும் தெற்கு சீனக் கடல் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராகவும், சர்வதேசக் கடல் வழிப் போக்குவரத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் இந்தியாவும் ஜப்பானும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டிருந்த சூழலில், சீனாவின் இந்த எதிர்வினை சர்வதேச அரசியல் தளத்தில் உற்றுநோக்கப்படுகிறது.