தலைகீழாகத் தவித்த ஆமைக்கு உதவிய மற்றொரு ஆமை... நெகிழ்ச்சி வீடியோ!

 
ஆமை

 

சீனாவில் உள்ள உயிரியல் பூங்காவில், தரையில் தலைகீழாகக் கவிழ்ந்து எழ முடியாமல் தவித்த ஆமைக்கு மற்றொரு ஆமை உதவிய காட்சி இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சீனாவின் நான்ஜிங் நகரில் உள்ள ஹாங்ஷான் வன உயிரியல் பூங்காவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 200-க்கும் மேற்பட்ட வகையான உயிரினங்கள் பராமரிக்கப்படும் இந்தப் பூங்காவில், ஒரு ஆமை தரையில் முதுகுப்புறமாகக் கவிழ்ந்து கிடந்தது. அதனால் இயல்பான நிலைக்குத் திரும்ப முடியாமல் கால்களை அசைத்தபடி போராடிக் கொண்டிருந்தது.

இதைக் கவனித்த மற்றொரு ஆமை, மெதுவாக அதன் அருகில் சென்றது. பின்னர் தனது தலையால் தள்ளி, பலமுறை முயற்சி செய்து தலைகீழாகக் கிடந்த ஆமையை மீண்டும் கால்களில் நிற்க வைத்தது. இதைப் பார்த்த பூங்காவுக்கு வந்திருந்த பார்வையாளர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.

விலங்குகள் சில நேரங்களில் ஒன்றுக்கொன்று உதவி செய்து கொள்வதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அரிய காட்சியைப் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மெதுவாக நகரும் ஆமையின் விடாமுயற்சியும், மற்றொரு ஆமைக்கு அது உதவிய விதமும் இணையவாசிகளைக் கவர்ந்துள்ளது.