நியூசிலாந்து எம்.பி. களுக்கு சீனா தடை!
நியூசிலாந்து நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த லாரா மெக்ளூர், டங்கன் வெப், மவுரீன் பக், டேவிட் வில்சன் ஆகிய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மே மாதம் ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக தைவான் நாட்டிற்குச் சென்றனர். அங்கு அவர்கள் அந்நாட்டுத் துணைத்தலைவர் சியாவ் பி-கிம் உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பானது தங்களது நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் செயல் என்றும், பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவளிக்கும் போக்கு என்றும் சீனா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
இதன் தொடர்ச்சியாக தைவானுக்குச் சென்ற அந்த நான்கு நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சீனா, ஹாங்காங் மற்றும் மெக்காவிற்குள் நுழைவதற்கு பீஜிங் அரசு ஓராண்டு காலத்திற்குத் தடை விதித்துள்ளது. நியூசிலாந்து நாட்டின் மக்கள் பிரதிநிதிகளைக் குறிவைத்து சீனா இத்தகைய கடுமையான பயணத் தடையை விதிப்பது இதுவே முதல் முறை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில், தற்பொழுது மக்கள் பிரதிநிதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த ஓராண்டு பயணத் தடை உலக நாடுகளிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு நியூசிலாந்து அரசுத் தரப்பில் இருந்து என்ன மாதிரியான பதிலடி கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் தற்பொழுது எழுந்துள்ளது.
