சீனாவின் முதல் மின்சார விமானம் மனிதர்களுடன் பறந்து வரலாற்றுச் சாதனை!

 
சீனா மின்சார விமானம்

சீனா உள்நாட்டிலேயே தயாரித்த 19 இருக்கைகள் கொண்ட மின்சார விமானத்தில், முதல் முறையாக மனிதர்கள் பங்கேற்ற சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.

சீனாவின் அரசுக்குச் சொந்தமான விமானத் தயாரிப்பு நிறுவனமான 'கோமாக்', முன்னணி பேட்டரி நிறுவனமான சி.ஏ.டி.எல் மற்றும் ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து 'சி.இ-25ஏ' என்ற இந்த மின்சார விமானத்தை உருவாக்கியுள்ளன

கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள பின்சோ நகரில் கடந்த சனிக்கிழமை இந்தச் சோதனைப் பயணம் நடைபெற்றது. இதில் 2 விமானிகள் மற்றும் ஒரு விமானச் சோதனைப் பொறியாளர் என மொத்தம் 3 பேர் பயணித்தனர்.

சீனா CE-25A மின்சார பயணிகள் விமானம்

சுமார் 57 நிமிடங்கள் 46 விநாடிகள் நடைபெற்ற இந்தச் சோதனை நிகழ்வில், விமானம் 16 நிமிடங்கள் 38 விநாடிகள் வானில் பறந்து 60.4 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்தது. பயணத்தின் போது விமானத்தின் அனைத்து அமைப்புகளும் மிகவும் துல்லியமாகச் செயல்பட்டதாகக் கோமாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 10 டன் எடை கொண்ட CE-25A விமானம், குறுகிய தூர நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்காக 19 இருக்கைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்த விமானம், ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் வல்லமை பெற்றது.

கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தனது முதல் ஆளில்லா சோதனை ஓட்டத்தைத் தொடங்கிய இந்த விமானம், மனிதர்களை ஏற்றிச் செல்வதற்கு முன்பாக 19 தானியங்கி சோதனைப் பயணங்களை வெற்றிகரமாக முடித்திருந்தது. இந்த வெற்றியின் மூலம், வணிக ரீதியான மின்சார விமானப் போக்குவரத்துத் துறையில் சீனா ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.