இமயமலை பிராந்தியத்தில் மீண்டும் பனிப்பாறை பேரழிவுகளுக்கு வாய்ப்பு: சீன நிபுணர் எச்சரிக்கை!
இமயமலைப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த பனிப்பாறை உடைப்பு மற்றும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, வருங்காலத்திலும் இதுபோன்ற பேரழிவுகள் அடிக்கடி நிகழக்கூடும் எனச் சீன காலநிலை வல்லுநர் எச்சரித்துள்ளார்.

நேபாளம்-திபெத் எல்லையில் உள்ள இமயமலைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி இரண்டு மிகப்பெரிய பனிப்பாறைகள் உடைந்து விழுந்தன. இதனால் போடேகோஷி நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு பெரும் சேதத்தை விளைவித்துள்ளது.
சீனாவின் தேசிய பருவநிலை மையத்தின் துணை இயக்குநர் காவோ ராங் இதுகுறித்துத் தெரிவிக்கையில், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் திபெத் பீடபூமியின் பனிப்பாறை பகுதி 24 சதவீதத்திற்கும் அதிகமாகச் சுருங்கியுள்ளதாகவும், சுமார் 7 ஆயிரம் சிறிய பனிப்பாறைகள் முற்றிலும் மறைந்து விட்டதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

வருங்காலத்தில் திபெத் பீடபூமி முழுவதும் உள்ள பனிப்பாறைகளின் கட்டமைப்பு உறுதித்தன்மை மேலும் குறையும் என்றும், இதனால் பனிப்பாறைகள் உடைவது போன்ற பேரழிவுகள் அடிக்கடி நிகழ்ந்து கடுமையான தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
