"வெளிநாட்டுப் பெண்களின் அழகில் மயங்காதீங்க" - திருமண வயதிலுள்ள ஆண்களுக்குச் சீன அரசு எச்சரிக்கை!
சீனாவில் நிலவி வரும் கடுமையான பாலினச் சமநிலையின்மை மற்றும் மக்கள் தொகைச் சரிவுக்கு மத்தியில், வெளிநாட்டுப் பெண்களைத் திருமணம் செய்ய முயலும் தங்கள் நாட்டு ஆண்களுக்குச் சீன அரசு தற்பொழுது ஒரு விநோதமான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சீனாவில் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்ட 'ஒரு குழந்தைத் திட்டம்' மற்றும் ஆண் குழந்தைகளுக்கான முன்னுரிமை ஆகியவற்றின் விளைவாக, தற்பொழுது பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட மிகக் குறைவாக உள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, சீனாவில் திருமண வயதுடைய பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை சுமார் 2 கோடி அதிகமாக உள்ளது.

இதனால் சீனாவில் உள்ள லட்சக்கணக்கான ஆண்களுக்குத் தங்களது சொந்த நாட்டில் திருமணம் செய்யப் பெண்கள் கிடைக்காத ஒரு கடுமையான சமூக நெருக்கடி நிலை நீடித்து வருகிறது. சொந்த நாட்டில் வரன் கிடைக்காததால், சீன ஆண்கள் பலர் வியட்நாம், கம்போடியா, மியான்மர் போன்ற அண்டை நாடுகளைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு சில சட்டவிரோத திருமணத் தரகர்கள் மற்றும் ஆள் கடத்தல் கும்பல்கள், ஏழை நாட்டுப் பெண்களை ஏமாற்றிச் சீன ஆண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சட்டவிரோத மற்றும் மோசடித் திருமணங்களைத் தடுக்கும் நோக்கில் சீன அரசு இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
"வெளிநாட்டுப் பெண்களின் அழகில் மயங்கி, அவசரப்பட்டுத் திருமண முடிவுகளை எடுக்க வேண்டாம். முறையான ஆவணங்கள் மற்றும் சட்டப்பூர்வப் பின்னணி இல்லாமல் வெளிநாட்டுப் பெண்களைத் திருமணம் செய்ய முயலும் போது, அவர்கள் பண மோசடி அல்லது சர்வதேச ஆள் கடத்தல் கும்பல்களிடம் சிக்கி ஏமாற வாய்ப்புகள் அதிகம்."
மேலும், எல்லோரையும் கவரும் விதமாக விளம்பரம் செய்யப்படும் ஆன்லைன் வரன் தேடல் தளங்கள் மற்றும் போலித் தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், திருமணத்திற்கு முன்பாகப் பெண்களின் குடியுரிமை மற்றும் சட்டப்பூர்வ ஆவணங்களைத் தீர விசாரிக்குமாறும் தனது நாட்டு ஆண்களைச் சீன அரசு அறிவுறுத்தியுள்ளது.
