சீன ராணுவத்தில் ஏஐ பயன்பாட்டை அதிகரிக்க அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவு!

 
சீன அதிபர் ஷி ஜின்பிங் சீனா

சீன மக்கள் விடுதலை ராணுவத்தை அதிநவீன தொழில்நுட்பங்களுடன் வலுப்படுத்தும் நோக்கில், ராணுவ நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆளில்லா தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை விரைவுபடுத்துமாறு சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

போர்க்களத் திறன்: சீன ராணுவத்தின் 99-வது ஆண்டு விழாவை முன்னிட்டுப் பேசிய அதிபர் ஷி ஜின்பிங், "போர்க்களத்தில் காட்டப்படும் ஆற்றல் மற்றும் திறனே ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பு நவீனமயமாக்கலின் உண்மையான அளவுகோல்" என வலியுறுத்தினார். வரும் 2027-ம் ஆண்டு சீன ராணுவத்தின் 100-வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்குள் ராணுவத்தை முழுமையாக நவீனமயமாக்குவதில் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைய வேண்டும் எனத் தெளிவான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கை அடைவதற்காக ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் இயங்கும் ஆளில்லா விமானங்கள், ராணுவ ரோபோக்கள் மற்றும் தானியங்கி போர்க்கப்பல்களை உருவாக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ராணுவத் தேவைக்கான அதிநவீன தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும், நிபுணர்களை உருவாக்குவதற்கும் வுகான் நகரில் புதிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் உயர் தொழில்நுட்ப நிறுவனங்களை ஒருங்கிணைத்து இந்த ராணுவ மேம்பாட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன. ராணுவத் தொழில்நுட்பத் திட்டங்களில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்கவும், நிதியின் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் கடுமையான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.