சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வாரம் அமெரிக்கப் பயணம் - விமான நிலையத்திற்கே சென்று நேரில் வரவேற்கும் டிரம்ப்!
சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசு முறை பயணமாக அடுத்த வாரம் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், அவரை அமெரிக்க அதிபர் டிரம்ப் விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்க உள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகிற செப்டம்பர் 23-ஆம் தேதி அரசு முறை பயணமாக அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். தலைநகர் வாஷிங்டனுக்கு அருகில் அமைந்துள்ள ஆண்ட்ரூஸ் விமானப் படைத் தளத்தில் அவரது விமானம் தரையிறங்குகிறது. வழக்கத்திற்கு மாறாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் விமான நிலையத்திற்கே நேரில் சென்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை உற்சாகமாக வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இரு நாட்டுத் தலைவர்களும் செப்டம்பர் 24 அன்று விரிவான இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சந்திப்பில், சுங்க வரிகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் கட்டுப்பாடு, அரிய கனிமங்கள் மற்றும் இருநாட்டு வணிக உறவுகள் குறித்து முக்கிய விவாதங்கள் நடத்தப்பட உள்ளன.

இந்தச் சந்திப்பு குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், தானும் சீன அதிபரும் மிகச் சிறந்த நல்லுறவைப் பேணி வருவதாகவும், இந்தச் சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே பல முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு காலத்தில் சீனப் பொருட்கள் மீதான சுங்க வரியை 145 சதவீதம் வரை உயர்த்தியிருந்ததாகவும், ஆனால் அது சீனப் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்ததால் அந்த நிலையைத் தொடர்ந்து நீட்டிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
